
தருமபுரி
பதினோறு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட வனஉரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டி தமிழ்நாடு பழங்குடியினர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பழங்குடியினர் நல சங்கத்தினர் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலச் சிறப்புத் தலைவர் நஞ்சப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் தேவராசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காதர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
“2006-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வன உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் கிராமசபையை கூட்டவும், வனக்குழுக்களை அமைக்கவும் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனப்பகுதிகளில் பட்டா இல்லாத நிலங்களில் சாகுபடி செய்து வரும் பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
வனம் மற்றும் மலைச் சார்ந்த பகுதிகளில் சாகுபடி செய்து வரும் பட்டா இல்லாத நிலங்களுக்கு 1989-ல் விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்.
பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ்களை முறையாக வழங்க வேண்டும்.
தமிழக பழங்குடி மக்களை ஐந்தாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
தமிழகத்தில் பழங்குடியினரின் நிலங்களை, மற்றவர்கள் வாங்க தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.