
தருமபுரி
தருமபுரியில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 34 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் இருந்து பெங்களூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்தை சேலம் மாவட்டம் வீரசானூரைச் சேர்ந்த சத்தியநாதன் (47) என்பவர் ஓட்டினார். பேருந்தில் மொத்தம் 63 பயணிகள் இருந்தனர்.
அதேபோன்று அகரம் பகுதி வழியாக காரிமங்கலம் நோக்கி தொழிலாளர்களுடன் ஒரு லாரியும் வந்துக் கொண்டிருந்தது.
அரசு பேருந்தும், லாரியும் அகரம் பிரிவுச் சாலையை கடந்தபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பேருந்து சின்னாபின்னாமானது. லாரியில் வந்த குடிமியானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த 25 பேரில், மஞ்சுளா (35) செவத்தா (37) மாது (50) உள்பட 14 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதேபோல் அரசு பேருந்தில் சென்ற நாமக்கல்லைச் சேர்ந்த கீதா (38) ஹரிணி (17) தர்மபுரியைச் சேர்ந்த சின்னசாமி (55) மேட்டூரைச் சேர்ந்த ராஜகுமாரன் (44) பேருந்து ஓட்டுநர் சத்தியநாதன், ஓட்டுநர் யுவராஜ் (29) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 34 பேரும் அவசரஊர்தி மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து காரணமாக காரிமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவலறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆட்சியர் விவேகானந்தன் ஆகியோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவல் ஆய்வாளர் கண்ணம்மாள் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.