உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மோடிக்கு அழுத்தம் தர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் எதற்காக வலியுறுத்துகிறார்?

First Published Feb 14, 2018, 10:49 AM IST
Highlights
immediately join all the party meetings and put pressure to Modi - p.r. Pandian


கிருஷ்ணகிரி

கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி உடனே தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமர் மோடிக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக கடந்த அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகா உரிய நீரை தராததின் காரணமாகவும், பருவமழை கை கொடுக்காததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென்று சரிந்தது.

விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளது. இந்தப் பயிர்களை காக்க தண்ணீர் தேவைப்படுவதால் கர்நாடகாவிடம் இருந்து உரிய தண்ணீரை தமிழக அரசு கேட்டு பெற்று தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையை திறக்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று "கர்நாடகாவிற்குள் நுழையும் போராட்டம்" நடத்தப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருந்தார்.

அதன்படி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து நேற்று காலை 16 வாகனங்களில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டனர். அவர்கள் தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி வழியாக நேற்று மாலை ஓசூர் வந்தனர்.

அவர்கள் ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி பக்கமாக மாலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஓசூர் - பெங்களூரு பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் காவலாளர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிடப்பட்டது.

இந்த போராட்டம் குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம், "காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருக தொடங்கிவிட்டது. கருகும் பயிரை பார்த்து விவசாயிகள் வயலில் விழுந்து இறந்து வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை கர்நாடக அரசு ஏற்க மறுப்பதை அனுமதிக்க முடியாது.

ராகுல்காந்தி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் கபினி அணையை திறக்க சென்றோம். ஆனால் எங்களை கர்நாடகா செல்லவிடாமல், தமிழக அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை கையாளுகிறது.

ஒட்டு மொத்தமாக பா.ஜனதா கட்சி தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. கர்நாடக அரசு ஒரு சொட்டு தண்ணீரை கூட கொடுக்க மறுக்கிறது.

விவசாயிகள் அழிவதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

உடனே தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமர் மோடிக்கு அழுத்தம் தர வேண்டும். காவிரி உரிமையை மீட்க வேண்டும்.  அதை அவர்கள் செய்ய தவறுவதால் தான் நாங்கள் கபினியை திறப்பதற்காக புறப்பட்டோம்" என்று  அவர் கூறினார்.

இந்தப் போராட்டத்தில் நாகை மாவட்ட நிர்வாகி ராமதாஸ், ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் ஸ்ரீதர், புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

click me!