
கிருஷ்ணகிரி
ஓசூர் வனப்பகுதியை தொடர்ந்து படையெடுக்கும் காட்டு யானைகளால் மக்கள் பீதியில் உள்ளனர். இதுவரை 76 யானைகள் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக 11 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள விவசாய பயிர்களை மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி 35 யானைகளும், நேற்று முன்தினம் 20 யானைகளும் ஓசூர் வனப்பகுதிக்கு வந்துள்ளன. இவைகள் வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து மேலும் 10 யானைகள் ஓசூர் வனப்பகுதிக்கு வந்ததால் ஓசூர் வனப்பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஓசூர் சானமாவு, போடூர்பள்ளம் காடுகளில் முகாமிட்டுள்ள இந்த யானைகியள் கூட்டத்தில் இருந்து ஒரு ஆண் யானை மட்டும் தனியாக பிரிந்து சுற்றுகிறது. இந்த ஒற்றை யானை கோபசந்திரத்தை ஒட்டியுள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகில் தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ளது.
இந்த யானைகளால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 76 யானைகளில் 30 யானைகள் நேற்று முன்தினம் இரவு ஆழியாளம் வழியாக ராமாபுரம் பகுதிக்கு சென்றன. பின்னர் இந்த யானைகள் கூட்டம் அங்கிருந்து பத்தாகோட்டா கிராமத்திற்கு சென்றது.
இதுகுறித்து மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினர்.
ஓசூர் வனப்பகுதிக்கு யானைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யானைகள் வனப்பகுதிகளில் ஆங்காங்கே முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த 76 யானைகளையும் ஒன்றாக சேர்த்து வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என்று மக்கள் மற்றும் விவசாயிகள் கோரியுள்ளனர்.