கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை...

First Published Feb 14, 2018, 10:32 AM IST
Highlights
Action against government officials who support temple occupations


கரூர்

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று திருத்தொண்டர் சபையின் நிறுவனர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு வழக்கில் வருவாய்த் துறையினர் நில அளவை மேற்கொண்டு வருவதை ஆய்வு நடத்தினர்.

அதன்பின்னர் திருத்தொண்டர் சபையின் நிறுவனர் ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:

"தமிழகத்தில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான 7 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. 5இலட்சம் ஏக்கர் நிலங்களுக்கான பட்டா உள்ளன. இதுவரையில், சுமார் 23 ஆயிரம் ஏக்கர் நிலங்களை திருத்தொண்டர் சபை மற்றும் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பினர் மீட்டுள்ளனர்.

கரூரில் இனாம் கரூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயிலுக்குச் சொந்தமானவை. இதில் 1912-ஆம் ஆண்டிற்கான ஆவணத்தின்படி வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 497 ஏக்கர் நிலங்களில் 150 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து  மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, திருத்தொண்டர் சபை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் கோயில் நிலங்கள் அளக்கப்பட்டு வருகிறது.   

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

இந்து சமய அறநிலைய சட்டவிதிமுறையின்படி, கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள ஏழை, எளியவர்களை வாடகைதாரர்களாக மாற்ற உள்ளோம். கோயில் சொத்துக்களை மீட்பதில் அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை.  அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியின்போது, அனைத்து சிவனடியார் கூட்டமைப்பின் தலைவர் ராமநாதன், செயலாளர் சரவணன், கோயில் செயல் அலுவலர் ராஜாராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

click me!