பனியன் ட்ரவுசரோடு டாஸ்மாக்கில் பீர் வாங்கிய செயல் அலுவலர் ! பள்ளிக்கல்வி வாசகங்களோடு சென்றதால் சர்ச்சை

By Raghupati RFirst Published Dec 21, 2021, 10:27 AM IST
Highlights

இல்லம் தேடிக் கல்வி டி-சர்ட் உடன் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கும் செயல் அலுவலரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அதில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் செயல் அலுவலர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 28 அன்று வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய நெருக்கடியான சூழலில், வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத ஒரு முன்னெடுப்பாகத் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள எச்சரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறார். பயனுள்ள திட்டத்தைச் செயல்படுத்துவதில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

கொரானா பொதுமுடக்கக் காலத்தில் பள்ளிச் சூழலையும் படிப்பில் ஆர்வத்தையும் இழந்துவிட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிரப்புவதற்கு, பள்ளிக்குச் செல்லும் விருப்பத்தை வளர்ப்பதற்கு உதவும் என்ற கோணத்தில் திட்டம் வரவேற்கப்படுகிறது. கலைக்குழுவினர், பயிற்சி பெறவுள்ள தன்னார்வலர்கள் என லட்சக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட இருப்பதால், அதனால் ஒரு பொது அக்கறை விளைகிறது என்ற கோணத்திலும் வரவேற்கப்படுகிறது.தமிழகம் முழுக்க முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டம். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டுவந்தது. இதில் சர்மிளா சங்கர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி டி-சர்ட் உடன் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிகொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் வீடியோ அங்குள்ளோரால் எடுக்கப்பட்டது.

அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால், அக்குழு மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பணிக் குழுவை முழுமையாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருந்து நீக்கப்படுவதாக திருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.

click me!