Fishermen arrested: தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம். புதுகை மீனவர்கள் 14 பேர் கைது. காலவரையற்ற வேலைநிறுததம்!

By manimegalai a  |  First Published Dec 21, 2021, 9:40 AM IST

ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்களை ஏற்கெனவே இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டது, தமிழ்நாடு மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்களை ஏற்கெனவே இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டது, தமிழ்நாடு மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும்போது, அவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குவதும், கைது செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக கைது நடவடிக்கைகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடங்கியுள்ளன.

Latest Videos

undefined

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேர் மற்றும் அவர்கள் சென்ற 8 படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். மீனவர்கள் அங்கிருந்து புறப்பட முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை அனைவரையும் கைது செய்து இலங்கை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறல் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 55 பேரையும் 8 விசைப்படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அதன் பின்னர் தீர்மானங்களையும் நிறைவேற்றினர். அதில் வரும் 31ம் தேதிக்குள் மீனவர்களையும், படகுகளை விடுவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி 22-ஆம் தேதி தங்கச்சிமடம் வலைசை தெருவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும், புத்தாண்டு தினமான ஜனவரி ஒன்றாம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலை தங்கச்சிமடம் ரயில்வே கேட்டில் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட பரபபரப்பு அடங்குவதற்குள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது தமிழ்நாடு மீனவர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை 102 விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அய்யனார், எல்லப்பன், ராம்குமார், மணிகண்டன், ராஜா, ராஜேஷ், விஜயேந்திரன், பிரதீப், அருண், ஆகாஷ், செல்லஞ்செட்டி, சரண், முத்துவேல், பழனி, ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 14 பேரையும், யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மேலும், இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்வதும் விசைப்படகை விடுவிக்காமல் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்வதும் வாடிக்கையாக உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ள மீனவர்கள், இதற்கு மத்திய, மாநில அரசுகள் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரம் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஜெகதாப்பட்டின மீனவ பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை என இரண்டு மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

click me!