புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ராஜ்குமார் என்பவர் கடந்த ஆண்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்திருந்த ராஜ்குமார், சிறுமியை திருமணம் ஆசைக்காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்துவிடுவேன் என மிரட்டி கட்டாய கருத்தரிப்பு செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ராஜ்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை நீதிபதி சத்யா வழங்கியுள்ளார். மேலும் அபராத தொகையாக ரூபாய் 50 ஆயிரத்தை கட்டத்தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
மேலும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூபாய் 20 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து மொத்தம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு, ஏற்கெனவே அரசு 4 லட்சம் இழப்பீடு வழங்கிய நிலையில், மேலும் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தவிட்டுள்ளார்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது