புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ளட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து பா.ஜ.க. தனியாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ளட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து பா.ஜ.க. தனியாக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் பிறமாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதனால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக நாட்கள் வெகு குறைவாகவே இருந்ததால் கூட்டணிக் கட்சிகளுக்குள் திட்டமிட்டபடி இடப்பங்கீடு செய்ய முடியவில்லை.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. தனித்துப்போட்டி என அறிவித்துவிட்ட நிலையில் மற்றொரு பெரிய கட்சியான பா.ஜ.க. இடப்பங்கீடு குறித்து அதிமுக உடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் வாழ்வா, சாவா போராட்டத்தில் இருக்கும் அதிமுக தலைமை நிர்வாகிகள் பா.ஜ.க. கேட்ட இடங்களை வழங்க மறுத்துவிட்டனர். ஒருசில மாவட்டங்களில் அங்குள்ள பிரதிநிதிகள் கலந்தாலோசித்து இடப்பங்கீட்டை முடித்துள்ளனர்.
அதிமுக தங்களுக்கு தேவையான இடங்களை எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றில் பா.ஜ.க.-வை போட்டியிடுமாறு கூறியதால் அக்கட்சித் தலைவர்கள் அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜ.க., அ.தி.மு.க. முரண்பாடு திமுக-வுகே பலமாய் அமையும் என்று அரசியல் விமர்சர்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மோதலுக்கு உச்சகட்டமாக கடைசி நாளில் அதிமுக தங்களுக்கு கொடுக்காத இடங்களில் பா.ஜ.க.-வினர் போட்டியாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சியில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி 9 வது வார்டுக்கு காலையில் அதிமுக சார்பில் அழகு சுந்தரி, என்பவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தநிலையில் மாலையில் அதிமுக-வுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வை சேர்ந்த சாந்தர் என்பவர் தங்கள் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். கடைசி நாளில் அதிமுக மற்றும் பாஜக-வின்ர் போட்டி போட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது கூட்டணியில் குழப்பட்தை ஏற்படுத்தியிருக்கிறது.