
புதுக்கோட்டை அருகே 6 மாத கர்ப்பிணி பெண் அடித்து கொன்றுவிட்டு அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தெரியாமல் புதைத்தாக புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி தொண்டைமான் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இருவருக்கும் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் அமுதா தம்பதியின் மகள் மோனிஷா(23). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, கணவர் வீட்டில் வசித்த மோனிஷா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி மோனிஷா திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என கூறி மோனிஷாவின் பெற்றோருக்கும் போலீசாருக்கும் தெரிவிக்காமல் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் மோனிஷாவின் உடலை அன்றே அடக்கம் செய்துவிட்டனர். கர்ப்பிணி பெண் மோனிஷாஉயிரிழந்தது குறித்து பெற்றோருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்ததால் கடும்ப தகராறில் அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகமடைந்தனர்.
இதனால், கர்ப்பிணி மோனிஷாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோனிஷாவிற்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, புதுக்கோட்டை உதவி ஆட்சியர், தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட மோனிஷாவின் உடல் பொக்லைன் மூலம் தோண்டி வெளியே எடுக்கப்பட்டது. பின்னர், அதே இடத்தில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முடிவுகள் இன்று அல்லது நாளை வெளிவரும். இதுதொடர்பாக போலீசார் மோனிஷாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.