
திருவண்ணாமலை
ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நடந்த மகளிர் விழிப்புணர்வு கூட்டத்தில், “வரதட்சணை கொடுமைப்படுத்துவது தெரிந்தால் தைரியமாக காவல்நிலையத்தில் சொல்லுங்கள். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆய்வாளர் பேபி ஆவேசமாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் சார்பில் மகளிர் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆய்வாளர் பேபி தலைமை வகித்தார். காவலாளர்கள் பிரேமகுமாரி, சகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெரீனாபேகம் கலந்து கொண்டு மகளிர் விழிப்புணர்வு குறித்து விளக்கிப் பேசினார்.
அவர், “பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண் பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
எது நல்லது? எது கெட்டது? என்பதை பிள்ளைகளுக்கு நல்ல விதமாக சொல்லி தாருங்கள்.
பாலியல் தொந்தரவுகள் யாராவது தருவதாக தெரிந்தால் மகளிர் காவல் நிலையத்திலும், தாலுகா காவல் நிலையத்திலும், என்னிடத்திலும் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள். ஒரு பெண் படித்திருந்தால் தனது குடும்பத்தையே காப்பாற்றி கொள்வாள்.
வரதட்சணை கொடுமைப்படுத்துவது தெரிந்தால் தைரியமாக சொல்லுங்கள்” என்று பேசினார்.
இக்கூட்டத்தில் கிராம மக்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் பெண் காவலர் யோகலட்சுமி நன்றித் தெரிவித்தார்.