தடுப்பனையை நீங்கள்  கட்டுகிறீர்களா? நாங்கள் கட்டட்டுமா? - தமிழக அரசுக்கு பி.ஆர் பாண்டியன் எச்சரிக்கை...

 
Published : Apr 30, 2018, 06:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
தடுப்பனையை நீங்கள்  கட்டுகிறீர்களா? நாங்கள் கட்டட்டுமா? - தமிழக அரசுக்கு பி.ஆர் பாண்டியன் எச்சரிக்கை...

சுருக்கம்

if you do not build We will build- PR Pandian warning for Tamil Nadu

நாகப்பட்டினம்

தடுப்பணை மற்றும் கதவணைகளை மே 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசு செயல்படுத்தாவிட்டால் ஜூன் 1-ஆம் தேதி விவசாயிகள், செங்கல் எடுத்துவந்து கதவணை அமைக்கும் பணி தொடங்குவோம் என்றார் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன். 

"காவிரிக்கு மாற்று காவிரியே" என்னும் முழக்கத்தை முன்னிறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் தமிழகம் தழுவிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் ஈடுபட்ட்டு வருகின்றனர். 

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு நேற்று திருவாரூர் நோக்கிச் செல்லும் வகையில் நாகப்பட்டினம் மாவட்ட எல்லை கொள்ளிடத்தில் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த வரவேற்பில், கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோவி. நடராஜன், தமிழக காவிரி விவசாய சங்க மாநிலத் தலைவர் புண்ணியமூர்த்தி, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அப்போது குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர், "காவிரி உரிமைக்கான போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைவதை பிளவுப்படுத்த நினைக்கிறது. 

தமிழக அரசு காவல்துறையை பயன்படுத்தி வழக்குப்போட்டு மத்திய அரசுக்கு துணைப்போகிறது. போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

மே 3-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. 

எனவே, தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்கள் கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

தமிழக அரசு தேவையான இடங்களில் கதவணைகளை அமைத்து கிடைக்கின்ற நீரை கொண்டு விவசாய நிலங்களுக்கு பாசன வசதியையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் கொள்ளிடம் போன்ற வடிகால் ஆற்றில் சிறப்பு நிதி பெற்று கதவணைகள் கட்டவேண்டும். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா  அறிவித்த கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்ட ரூ.420 கோடிக்கான திட்டம் ஐந்து ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. 

தற்போதைய அரசு நிலம் கையகப்படுத்த ரூ.37 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்திருப்பது காலம் தாழ்ந்த செயல். எனவே, உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இதேபோல, விவசாயிகளின் கோரிக்கையான கொள்ளிடம் ஆற்றில் சந்தப்படுகை - மேலகுண்டலபாடி இடையே கதவணை அமைக்க வேண்டும். 

இந்த இரு திட்டங்களும் மே 31-ஆம் தேதிக்குள் அரசு செயல்படுத்தாவிட்டால் ஜூன் 1-ஆம் தேதி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் தங்கள் கிராமங்களிலிருந்து செங்கல் எடுத்து வந்து கதவணை அமைக்கும் பணி தொடங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். 
 
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!