
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை நடந்த பேச்சு வார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இதையொட்டி வரும் 15ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், காலவரையற்ற போராட்டமாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிலுவை தொகை மொத்தமாக வழங்க முடியாது. படிப்படியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். ஆனால், அதை போக்குவரத்து தொழிலாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுடன், தொழிலாளர் நலத்துறை தனி துணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த, தொழிலாளர் நலத்துறை ஆணையம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இன்னும் சிறிது நேரத்தில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் தனி துணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற இருக்கிறது.
இந்த பேச்சு வார்த்தையில், போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ,போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.