
சசிகலா குடும்பத்தை அதிகாரப்பூர்வமாக விலக்கியதாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால், இரு அணிகள் இணைவது குறித்த பேச்சு வார்த்தைக்கு தயார் என ஓ.பி.எஸ்.யின் மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக, சென்னையில் செய்தியளார்களை சந்தித்த மைத்ரேயன் கூறியதாவது:
தமிழக அமைச்சர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதை பற்றி முதலமைச்சர் எடப்பாடி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.
தமிழக அரசு அதன் பாரம் தாங்காமல், தானாகவே கலைந்துவிடும். அப்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அதில், ஓ.பன்னீர்செல்வம் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை. குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை தடுக்க வேண்டிய அரசு, கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
இரு அணிகள் இணைவது குறித்த பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால், அதற்கு முன் சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் விலக்கியதாக அவர்கள் அறிவிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி அணியினர், இதனை வாய் மொழியாக அறிவிக்காமல், டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால், நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.
அதன்பின்னர், எங்கள் பேச்சு வார்த்தை நல்லமுறையில் நடந்து முடிந்து, இரு அணிகளும் ஒன்று சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.