
நான் நீதிபதிகளை தான் குற்றம் சாட்டினேன் எனவும், நீதிமன்றத்தை அல்ல எனவும் தெரிவித்த கர்ணன், பின்பு ஏன் அவமதிப்பு வழக்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தானாகவே நீதிபதி கர்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இதனால் ஆத்திடமடைந்த கர்ணன் நீதிபதிகள் ஆஜராகவில்லை என்பதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜகதீஸ் சிங் கெஹர், தீபக் மிஸ்ரா, ஜலமேஷ்வர், ரஞ்சன் கோகை, மதன் பி.லோகூர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் உள்ளிட்ட 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சியுற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து கோல்கத்தா போலீசார் கர்ணனை தேடி சென்னை வந்தனர். ஆனால் அவரது செல்போன் சிக்னல் ஆந்திர மாநிலம் தடாவில் காட்டியது.
கோல்கத்தா போலீசாரும் சென்னை போலீசாரும் தடா சென்று பார்த்த பொது கர்ணன் அங்கு இல்லை. இதனால் போலீசார் மீண்டும் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், 6 மாத சிறைத்தண்டனை திரும்ப பெற கோரி நீதிபதி கர்ணன் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கர்ணன் தரப்பில் வழக்கறிஞர் மேத்யூ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், உச்சநீதிமன்ற உத்தரவு தனது அடிப்படை உரிமையை பறிப்பதாகும் எனவும், வெளிநாடு செல்லவில்லை என்றும், எங்கும் ஓடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் மீது தான் குற்றஞ்சாட்டினேன்,நீதிமன்றத்தின் மீது அல்ல. எனவே தன் மீது அவமதிப்பு வழக்கு ஏன் என நீதிபதி கர்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.