
கன்னியாகுமரி
மலேசியாவில் பரிதவிக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 26 பொறியியல் பட்டதாரிகளை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டச் செய்திக்குறிப்பில் கூறியதாவது:
“கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரை அடுத்த நெல்லியரைக்கோணம் விஜயகுமார் மகன் பிஜோ, கல்குறிச்சி வாழவிளை தாமஸ் மகன் தருண் ஜோஸ், தக்கலை புலியூர்குறிச்சி ஐயப்பன் மகன் தானேஷ், நெல்லியரைக்கோணம் சுந்தர் மகன் ஜாஸ்பர் புஷ், நெய்யூர் வடக்கு ஆழ்வார்கோவில் வர்கீஸ் மகன் டயற்றஸ், நாகர்கோவில் சகோதரர் தெரு கோபாலகிருஷ்ணன் மகன் தினேஷ், மேக்கோடு வலியவிளை கிறிஸ்டோபர் மகன் அஜீவ் ஜட்சன், மேக்காமண்டபம் வின்சென்ட் மகன் நிபின் மஜ்ஜோ உள்பட 30 பேர் இரணியலைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒருவரின் மூலமாக மலேசியா வேலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 30–ஆம் தேதி மலேசியா சென்றனர்.
இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பு முடித்தவர்கள். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 26 பேர். அங்கு அவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல் சித்திரவதை செய்யப்படுவதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்ததாம்.
உடனே அவர் மலேசியா கோலாலம்பூரில் உள்ள உள்ள இந்திய தூதரகத்தையும், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து மலேசியாவில் பரிதவிக்கும் 30 பேரையும் இந்தியா கொண்டு வர கேட்டுக் கொண்டுள்ளாராம்.
இதனையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை அழைத்து விசாரித்து தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
விரைவில் 30 பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக மலேசியா கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று பொன்.ராதகிருஷ்ணன் வெளியிட்ட அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.