
அவசரத்துக்கு லிப்ட்டு கேட்டு பைக்கில் ஒரு வாலிபருடன் சென்ற மனைவியை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த ஆற்றம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இவர்களுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நந்தினி தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர், அங்கிருந்தபடி திருவள்ளூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனிடையே, பீமன்தோப்பு கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் நந்தினிக்கு தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தினமும் அந்த வாலிபருடன் சுற்றி வந்துள்ளார் நந்தினி. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் நாகராஜ்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், பீமன்தோப்பு கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் பைக்கில் நந்தினி லிப்ட் கேட்டு சென்றுள்ளார். நந்தினி கள்ளக்காதல் வைத்துள்ள வாலிபரோடு தான் செல்கிறார் என தவறாக நினைத்த நாகராஜ், நந்தினியை தீர்த்துக்கட்ட மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து புன்னப்பாக்கம் குளக்கரை சாலை பகுதியில் சென்றதும், அந்த வாலிபர் ஓட்டி சென்ற பைக்கை நாகராஜ் வழிமறித்துள்ளார்.
பின்னர், அவர் வைத்திருந்த கத்தியை எடுத்து கொண்டு இருவரையும் பாய்ந்ததால் அந்த வாலிபர், அங்கேயே நந்தினியை விட்டுவிட்டு பைக்கையும் போட்டுவிட்டு ஓடினார், பயந்து போன நந்தினியும் அந்த இளைஞரின் பின்னல் ஓடினார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நாகராஜ், நந்தினியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலை, கழுத்து, கை என பல பாகங்களில் பலத்த வெட்டு காயங்கள் அடைந்த நந்தினி கதறி கீழே விழுந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புல்லரம்பாக்கம் போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நந்தினியை மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். நந்தினிக்கு அதிகமாக காயம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். மனைவியை கொடூரமாக கொன்ற நாகராஜை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.