
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் பிந்து (வயது -27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் சூளைமேடு, திருவேங்கடபுரத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். பிந்துவுக்கு கேரளாவைச் சேர்ந்த மனீஷ் (27) என்ற வாலிபரை காதலித்து வந்தார்.
மனீஷ் சென்னை தாம்பரம், காமராஜபுரம் பகுதியில் வசித்து வருகிறார். சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிந்துவும், மனீசும் கேரளாவில் பள்ளியில் படித்த போதே நண்பர்களாக பழகியுள்ளனர். பின்னர் 2008ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் சென்னையில் பணிபுரிந்து வந்தபோது, மனீஷ் பிந்துவிடம், உண்மையாக காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும், கூறியதன்பேரில், இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று நெருக்கமாக இருந்துள்ளனர். மேலும், சென்னை, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலை, ராமலிங்கேஸ்வரர் கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவன், மனைவி எனக் கூறி சில காலம் தங்கியிருந்துள்ளனர்.
ஆனால் சமீபகாலமாக மனீஷ், பிந்துவிடம் சரியாக பேசாமல் இருந்ததால், சந்தேகமடைந்த பிந்து ஊரில் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, மனீஷுக்கும் வேறொரு பெண்ணுக்கும் வருகிற 13ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது தெரியவந்தது.
இதனால் ஏமாற்றமடைந்த பிந்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மனீஷ் பிந்துவை ஏமாற்றியது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.