நகைத் திருட்டில் ஈடுபட்ட படித்த இளைஞர்கள் அறுவர் கைது...

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 02:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
நகைத் திருட்டில் ஈடுபட்ட படித்த இளைஞர்கள் அறுவர் கைது...

சுருக்கம்

திருவாரூரில், சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட படித்த இளைஞர்கள் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

திருவாரூர் பிடாரிகோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி உமாமகேஷ்வரி (40). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் தட்டச்சுப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

தட்டச்சு செய்ய வந்த 3 பேர், உமாமகேஷ்வரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும், உமாமகேஷ்வரி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டும் தப்பி ஓடினர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் புனவாசல் பிரதானசாலைத் தெருவைச் சேர்ந்தவர் லெனின். இவருடைய மனைவி கோகிலா (40). இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இரவு வேளையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கோகிலாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

திருவாரூரைப் போல கூத்தாநல்லூர், குடவாசல், நன்னிலம் உள்ளிட்டப் பகுதிகளிலும் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதைதொடர்ந்து சங்கிலிப் பறிப்பில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு மயில்வாகனன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதன்படி துணை காவல் சூப்பிரண்டு சுகுமாறன், காவல் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஏட்டுகள் கண்ணன், அருள்ஜோதி, ரவி, பால்ராஜ், சிவா ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை காவலாளர்கள், தங்க சங்கிலி திருடர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொரடாச்சேரி மேலபருத்தியூரை சேர்ந்த சுந்தர் மகன் சுதர்சன் (20), கண்கொடுத்தவணிதத்தை சேர்ந்த நாகேந்திரன் மகன் டிரைவர் அருண்ராஜ் (26), ஜெயக்குமார் மகன் அஸ்வின் (22), செந்தில் மகன் மணிகண்டன் (23), மேலபருத்தியூரை சேர்ந்த இராமலிங்கம் மகன் விக்னேஸ்வரன் (27), பெருமாளகரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் விஜய் (23) ஆகிய 6 பேர் திருவாரூர், குடவாசல், நன்னிலம், கூத்தாநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சங்கிலி பறிப்பு மற்றும் மோட்டார்சைக்கிள் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலாளர்கள் 6 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள், 3 மோட்டார் சைக்கிள்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சுதர்சன் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்தவர். அஸ்வின் ஐ.டி.ஐ. படித்துள்ளார். மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். விஜய் எலக்டீரிசியன் ஆவார். விக்னேஸ்வரனின் தந்தை இராமலிங்கம் ஓமியோபதி மருத்துவர் ஆவார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!