
தன்னிச்சையாக செயல்பட்டு, தனியார் பொருட்காட்சிக்கு அனுமதியளித்த திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.ஆறுமுகசெல்வி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிஆர்ஓ அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகசெல்வி. கடந்த ஜனவரி மாதம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றார். திருநெல்வேலி மாவட்டத்திலேயே பணிபுரியத் தொடங்கினார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஆறுமுகசெல்வியை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் மு.கருணாகரன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் நகல், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் மூலம் ஆறுமுகசெல்வியிடம் ஒப்படைக்கப்ட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர் நன்னடத்தை விதிகள், ஒழுக்கக் கட்டுப்பாடு விதிகள் 17 (இ) பிரிவின்படி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள்:
“புளியங்குடி, ஆலங்குளம் கிராமங்களில் தனியார் பொருள்காட்சி நடத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. மாறாக, வாய்மொழியாக உத்தரவு வழங்கி பொருள்காட்சி நடத்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அனுமதித்திருப்பதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் இதர நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலை பெறாமலும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆறுமுகசெல்வி கூறியது:
“ஆலங்குளம், புளியங்குடியில் பொருள்காட்சி நடத்த நான் எந்தவித வாய்மொழி உத்தரவும் வழங்கவில்லை. அங்கு பொருள்காட்சி நடப்பது தெரியவந்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று கோட்டாட்சியர் மூலம் அதனை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பொருள்காட்சிக்கு தன்னிச்சையாக வாய்மொழி உத்தரவு அளித்ததாகக் கூறி என்னை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. அதற்கு முன்னர் என்னிடம் தன்னிலை விளக்கம் கேட்டிருக்கலாம். இல்லையெனில், செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலர், இயக்குநருக்கு புகார் தெரிவித்திருக்கலாம். ஆட்சியரின் இந்த நடவடிக்கை மன வேதனையை அளித்துள்ளது என்று தெரிவித்தார்.