தமிழக முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர கொடி மரம் தரை தட்டிய கப்பலில் இருந்து உருவாக்கப்பட்டதாக ருசிகர தகவல் கூறப்படுகிறது.
சென்னை கோட்டை கொத்தளம்
குடியரசு தினத்தில் ஆளுநர்களும், சுதந்திர தினத்தில் மாநில முதலமைச்சர்களும் அந்த அந்த மாநிலத்தில் கொடியேற்றுவார்கள். ஆனால் இதற்கு முன்பு சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் மாநில ஆளுநர்களே கொடியை ஏற்றிவைத்தனர். இதனையடுத்து தான் முதலமைச்சர்களுக்கு சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமையை தர வேண்டும் என போராடி வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதியாகும்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி 1974ஆம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல் முதலாக ஏற்றி ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர் கொடியேற்றும் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். சென்னையின் முக்கிய அடையாளமாக இருப்பது புனித ஜார்ஜ் கோட்டை இந்த கோட்டையில் 150 அடி உயாம் கொண்ட இக்கொடிக் கம்பம் தான் இந்தியாவிலேயே உயரமானதாகும்.
Independence day 2024 | ஆக்ஸ்ட் 15, 2024-ல் கொண்டாடப்படுவது 77வதா? அல்லது 78வது சுதந்திர தினமா?
கப்பலில் இருந்து உருவான கொடிமரம்
இந்த இடம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் ராணுவம் சார்பாக காலையும், மாலையும் ராணுவ வீரர்களின் கெத்தான அணிவகுப்போடு கொடியை ஏற்றி இறக்குவார்கள். இப்படி பல பெருமைகளை கொண்ட கோட்டை கொத்தள கொடிக்கம்பம் எங்கிருந்து வந்தது என்ற ருசிகர தகவல் வெளியாகியுள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையில் தங்கள் நாட்டு கொடியை ஏற்ற 1687 ஆம் வருடத்தில் கவர்னராக யேல் இருந்தபோது இக்கொடிக் கம்பம் நிறுவப்பட்டது.
கவர்னர் யேல் இங்கிலாந்தின் செயின்ட் ஜார்ஜ் கிராஸ் வடிவத்துடன் கூடிய கொடியை இந்தக் கம்பத்தில் முதன்முறையாக 1687 ஆம் வருடத்தில் ஏற்றினார். இந்த கொடிக்கம்பம் சென்னை அருகே தரை தட்டி உடைந்த "லாயல் அட்வெஞ்சர்" என்ற கப்பலில் இருந்த தேக்குமரத்தாலான கம்பம் எடுக்கப்பட்டு கோட்டைக் கொத்தளத்தில் நிறுவப்பட்டதாகும்.
பல நுறு ஆண்டுகள் பழமைவாய்ந்தது
சுதந்திரத்துக்குப் பிறகு இங்கு தினந்தோறும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கொடி மரம் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மின்னல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் கடுமையாகச் சேதமடைந்தது. இதனையடுத்து பெல் நிறுவனத்தின் துணையோடு கடல் காற்று போன்றவற்றால் எளிதில் துருப்பிடிக்காத வகையில், மரத்தால் ஆன கொடிக்கம்பத்துக்கு இணையான உயரத்தில் கொடிக்கம்பம் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கொடிக்கம்பத்தைத் தாங்கும் வகையில் சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட தடித்த இரும்புக் கம்பிகளால் தாங்கியிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.