பல கோடி ரூபாய் மோசடி புகாரில் வின் டிவி உரிமையாளரும், மயிலாப்பூர் இந்து சுசுவத நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான தேவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர் நிதி நிறுவனம்
பழமையான நிதி நிறுவனங்களில் ஒன்று மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனம். மயிலாப்பூர் மாட தெருவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் வைப்பு தொகை வைத்துள்ளனர். மொத்தமாக 525 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்.
முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உரிய வகையில் பணத்தை திரும்ப தராமல் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வைப்பு தொகை மீதான வட்டிகள் தாமதமாகவும், முதிர்ச்சி அடைந்த முதலீடுகள் பகுதி, பகுதியாக வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேவநாதன் கைது
மேலும் தங்களது பணத்தை திரும்ப தரும்படி தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனம் முன்பு முற்றுகையிட்டனர். ஆனால் பணத்தை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து பணம் விநியோகிக்கும் வகையில் செக் வழங்கப்பட்டது. அதுவும் சரியான முறையில் பணம் கிடைக்காத காரணத்தால் 140க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராக இருக்கும் தேவநாதன், வின் தொலைக்காட்சியின் உரிமையாளராக உள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.