Special Train : நாளை நெல்லை, திருப்பூர் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு எப்போது தெரியுமா.?
தெற்கு ரயில்வே சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில் மற்றும் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள் குறித்த முழு விவரங்களுக்கு உள்ளே காண்க.
ரயில்களில் கூட்ட நெரிசல்
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வியாழக்கிழமை வரவுள்ளது. இதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வெளியூர் செல்லவும், தங்களது உறவினர்களை பார்க்க சொந்த ஊர்களுக்கு செல்வவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அனைத்து ரயில்களிலும் நிரம்பி வழிகிறது. இதனால் சிறப்பு ரயில்கள் விடப்படுமா.? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயிலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
நாகர் கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்
அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ஏசி ரயில் பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06055/ 06056 ) இயக்கப்பட உள்ளது. (ஆகஸ்ட் 14ஆம் தேதி) நாளை இரவு 11:30 மணியளவில் சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது நாகர்கோவிலுக்கு அடுத்த நாள் மதியம் 12:மணி 30 நிமிடங்களுக்கு சென்று சேருகிறது.
ஆவடி வரை ரயில் இயக்கம்
இதேபோல் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து ஆவடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மதியம் 3 மணி 50 நிமிடங்களுக்கு புறப்படும் இந்த ரயிலானது அடுத்த நாள் ஆவடி ரயில் நிலையத்திற்கு காலை 5 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயிலானது ஆவடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை சென்றடைகிறது
கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்
மற்றொரு சிறப்பு ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கொச்சுவேலிக்கு ஏசி பெட்டிகளை கொண்ட ரயில்கள் (ரயில் எண் 06043/06044) இயக்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மதியம் 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் கொச்சிவேலிக்கு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு சென்று சேர்கிறது.
மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படுகிறது.இந்த ரயிலானது சென்னை சென்ட்ரல், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கொச்சுவேலியை சென்றடைகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது