
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 91.23 சதவீதம் வாக்குப்பதிவானது. இதன் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளன. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23ம் தேதி முதற்கட்டம் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்டமாக 142 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ஆக்சிஸ் மை இந்தியா
அதாவது ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 6 முதல் 8 தொகுதிகளில், விஜய்யின் தவெக 2 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்துள்ளது. அதாவது புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி 40 சதவீத வாக்குகளும், காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகள் பெறும் என தெரிவித்துள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ்
தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும். அதாவது மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 16 முதல் 19 தொகுதிகளிலும், இந்திய கூட்டணி சார்பில் 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தவெக ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறாது. பிற கட்சிகள் 1 முதல் 2 இடங்களை பிடிக்கும் என கணித்துள்ளது.
ஜேவிசி டைம்ஸ் நவ்
தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி 15 முதல் 17 தொகுதிகளிலும், இந்திய கூட்டணி சார்பில் 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. மற்றவை 1 முதல் 3 தொகுதிகள் என தெரிவித்துள்ளது.
என்டிடிவி
தேசிய ஜனநாயக கூட்டணி 19 தொகுதிகளிலும், இந்திய கூட்டணி சார்பில் 8 தொகுதிகளில், மற்றவை 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் ரங்கசாமி மீண்டும் முதல்வராவர் என தெரிவித்துள்ளது.