
கொளுத்துது வெயில் …பாவம் மக்களுக்கு தண்ணீர் கொடுங்கப்பா….விஜயகாந்த் அன்பு கட்டளை…
கோடையில் கடும் வெயிலில் வாடும் மக்களுக்கு உதவ ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்க தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோடை வெயில் இந்த ஆண்டு மிகக் கடுமையாக உள்ளது. பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளாகவே வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கிவிட்டது. வானிலை ஆய்வு மையமும் , இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயில் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளது.
இந்நிலையில் வெயிலில் அவதிப்படும் பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிக்க தேமுதிக சார்பில் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆண்டு தோறும் தேமுதிக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து பொது மக்களுக்கு உதவுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்ப்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி, தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.