சென்னையில் திருடர்களை ஓடஓட விரட்டி பிடித்த போலீசார் - நள்ளிரவில் சினிமாவை மிஞ்சிய சேசிங் காட்சிகள்

First Published Mar 11, 2017, 12:23 PM IST
Highlights
crime in chennai


சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்குமார் . தனியார் கம்பெனி ஊழியர். நேற்று இரவு அருண்குமார் வேலை முடிந்து, வீட்டுக்கு புறப்பட்டார். கோடம்பாக்கம் அருகே மகாலிங்கபுரம் பகுதியில் நடந்து சென்றார்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர், அவரை மறித்து தகராறு செய்தனர். பின்னர், அவரிடம் உள்ள பணம் செல்போனை பறிக்க முயன்றனர். அதனை அருண்குமார் தடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து, அருண்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

இதையடுத்து அங்கிருந்து நடந்தபடியே மெயின் ரோடான ஆற்காடு சாலைக்கு அருண்குமார் சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.

அந்த நேரத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட பைக் ஆசாமிகள், அதே வழியாக வந்தனர். அவர்களை கண்ட அருண்குமார், அடையாளம் காட்டினார். போலீசாரை கண்டதும், பைக் ஆசாமிகள் அசுர வேகத்தில் பறந்தனர்.

உடனே போலீசார், அனைத்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நூங்கம்பாக்கம், பாண்டிபஜார், கோடம்பாக்கம் ஆகிய காவல் நிலையத்தில் இருந்து போலீசார், தீவிரமாக வாலிபர்களை விரட்டி சென்றனர்.

ஆனால், வழிப்பறி வாலிபர்கள், யாரிடமும் சிக்காமல் அனைத்து சிறிய மற்றும் பெரிய தெருக்களில் நுழைந்து தப்பி சென்றனர். போலீசாரும், விடாமல் விரட்டினர். ஒரு கட்டத்தில் நுங்கம்பாக்கம் போலீசார், சுற்றி வளைத்தனர்.

அப்போது, போலீஸ்காரர் கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவர், வாலிபர்களை பிடிக்க முயன்றார். இதனால் 3பேரும், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டிவிட்டு, அங்கிருந்த தப்ப முயன்றனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார், தங்களது வாகனத்தை வைத்து, அவர்களின் பைக் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரையும், மடக்கி பிடித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

அவர்களிடம் இருந்து 2 பைக், கத்தி, பணம், அருண்குமாரிடம் வழிப்பறி செய்த செல்போன், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சிவபிரசாத்தை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3பேரையும் கைது செய்தனர். அவர்கள் யார், எதற்காக இந்த பகுதியில் சுற்றினர். அவர்கள் கொண்டு வந்தது திருட்டு பைக்குகளா, கூலிப்படையை சேர்ந்தவர்களா, கத்தியுடன் இருப்பதால் முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்களா என ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

சினிமா காட்சியை மிஞ்சும் வகையில், 3 காவல் நிலைய போலீசார், வழிப்பறி வாலிபர்களை சேசிங் செய்து, மடக்கி பிடித்தனர். இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

click me!