
தருமபுரி
பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக விளைநிலங்களை எடுப்பதை எதிர்த்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், சிவாடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக விவசாயிகளின் நிலங்களை எடுப்பதை எதிர்த்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என். மல்லையன் தலைமை வகித்தார்.
அந்த மனுவில், "சிவாடியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 1813 கோடியில் அமைக்கவுள்ளதாகவும், இதற்காக சிவாடியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் விவசாய நிலங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக வாழ்ந்து வரும் விவசாய நிலங்களை விட்டுவிட்டு, புறம்போக்கு நிலங்களை எடுக்கலாம்.
இதுகுறித்து, விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். விவசாயிகள் தங்கள் நிலங்களை எடுப்பதை எதிர்த்து ஏற்கெனவே ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, விவசாய நிலங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும்" என்று அதில் தெரிவித்து இருந்தனர்.
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, இதுதொடர்பாக பதில் அளிப்பதற்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்க கேட்டுக் கொண்டார். அதுவரை விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் அரசுத் துறையினர் யாரும் பணி செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலர் எம். ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. இளம்பரிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.