ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை; உடலை சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய கொடூரம்...

First Published May 22, 2018, 8:27 AM IST
Highlights
Woman killed and body was thrown into saddle man arrested


கோயம்புத்தூர் 

கோயம்புத்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியவரை காவலாளர்கள் கைது செய்தனர். 

கோயம்புத்தூர் மாவட்டம், இராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், சலவை தொழிலாளியான இவருடைய மனைவி ஜெயந்தி (35). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 

ஜெயந்தி அந்த பகுதியில் உள்ள வீடுகளில், வீட்டுவேலை செய்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி மாலையில் வீட்டைவிட்டு வெளியே சென்ற ஜெயந்தி திடீரென்று மாயமானார். 

இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து சிவக்குமார் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராமநாதபுரம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில், சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் எதிரில் சாக்கடை தண்ணீர் செல்லும் ஓடையில் சாக்குமூட்டையில் சடலம் கிடப்பதாக சிங்காநல்லூர் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த சடலத்தைக் கைப்பற்றினர். அங்கு மேற்கொண்ட விசாரணையில், சடலமாக கிடந்தவர் காணாமல்போன ஜெயந்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (34) என்பவர் ஜெயந்தியின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. உடனே காவலாளர்கள் மணிவேலை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவலாளர்கள் அவரை காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை செய்தனர். 

அப்போது அவர், ஜெயந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவலாளர்கள் மணிவேலை கைது செய்து, கோயம்புத்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

அவர் ஜெயந்தியை கொலை செய்தது குறித்து அளித்த வாக்கு மூலம் குறித்து காவலாளர்கள் கூறியது:  "மணிவேலின் சொந்த ஊர் திருச்சி திருவரங்கம் அருகே உள்ள எத்தரைபாளையம் ஆகும். 

இவர் ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் கடந்த மூன்று ஆண்டாக கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

தற்போது சுந்தரம் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால், வீட்டை மணிவேல் கவனித்து வந்தார். அப்போது அவர் ஜெயந்தியிடம் தொடர்பு கொண்டு, வீட்டை சுத்தம் செய்ய வருமாறு கூறி உள்ளார். 

அதன்படி, அவர் கடந்த 17-ஆம் தேதி மாலையில் அங்கு சென்று வீட்டை சுத்தம் செய்தார். அப்போது மணிவேல், ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி அவரை கடுமையாக திட்டியுள்ளார். 

தனது ஆசைக்கு இணங்க அவர் மறுத்ததால், மணிவேலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் ஜெயந்தியை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதனால் மயக்கம் அடைந்த ஜெயந்தியை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

கொலையை மறைக்கவும், தன் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ஜெயந்தி அணிந்திருந்த நான்கு சவரன் நகையை திருடியுள்ளார். பின்னர் சடலத்தை சாக்கு மூட்டைக்குள் வைத்து கட்டி, சிங்காநல்லூர் குளம் அருகே சாக்கடையில் வீசிவிட்டு மணிவேல் சென்றுவிட்டார். 

ஆனால், ஜெயந்தியிடம் செல்போனில் பேசியதை வைத்து காவலாளர்கள் பிடித்துவிட்டனர்" என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கொலையை மணிவேல் மட்டும்தான் செய்துள்ளார் என்று அவர் கூறுவது காவலாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வேறு யாருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!