
மதுரை
மகாத்மா காந்தியின் வழியில் பயணித்து இந்து - முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா வலியுறுத்தி உள்ளார்.
மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக, மீலாது மாநாடு மதுரையில் நேற்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஐக்கிய ஜமாஅத் தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், "முத்தலாக் தொடர்பான வரைவு மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பதை ஐக்கிய ஜமாஅத் கண்டிக்கிறது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையும் இல்லாமல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.
விவசாயிகள் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் நதிகளை இணைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பழ. கருப்பையா கலந்து கொண்டார். அப்போது அவர், "இஸ்லாமிய மார்க்கம் என்பது ஓர் இறைக் கொள்கை உடையது. தண்ணீர் குடிப்பது முதல் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கான ஒழுக்க நெறிகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன. இவற்றை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முகமது நபிகள் வகுத்து கொடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒன்றுபட வேண்டும். இனவெறி இருக்கக்கூடாது என்பதில் மகாத்மா காந்தி நோக்கமாக இருந்தார். இனவெறி மோதல்களைத் தடுக்க உண்ணாவிரதம் மேற்கொண்டவர் காந்தி. இந்து - முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என விரும்பிய அவரின் வழியில் நாம் பயணிக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழக ஆயர் பேரவைத் தலைவர் அந்தோணி பாப்புசாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் எம். அஜ்மல்கான், துணைச் செயலர் பீர்மீரான், அரசு டவுன் காஜியார் எம்.ஜி. மீர்மஹ்மூதுல் காதிரி, மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொருளாளர் எஸ். சேக் அப்துல்காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.