
உத்தண்டியில் கார் ரேஸ் சென்றபோது போக்குவரத்து ஆய்வாளர் மீது காரை ஏற்றிவிட்டு தப்ப முயன்ற உயர் ரக ரேஸ் கார்கள் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டன. பலகோடி மதிப்புள்ள ரேஸ் கார்களை ஓட்டிவந்த விஐபி வீட்டு பிள்ளைகளுக்கு ஆதரவாக உயர் போலீஸ் அதிகாரிகள் இறங்கி கட்டபஞ்சாயத்து செய்ததால் உயிரை பணயம் வைத்து பிடித்த போலீசார் கடுப்பில் உள்ளனர்.
சென்னை உயர் வகுப்பினர் அதிகம் வசிக்கும் இந்திய நகரங்களில் ஒன்று. இங்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பலகோடி மதிப்புள்ள ரேஸ்கார்களை விஐபிக்கள் வீட்டு பிள்ளைகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக ஓட்டுவதை காணலாம்.
இதே போன்று பல லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து இயக்குவதையும் பார்க்கிறோம். இப்படி வாகனங்களை ஓட்டுபவர்கள் சாலையில் தாறுமாறாக ஓட்டி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
சமீபத்தில் ஆர்கே சாலையில் தாறுமாறாக விலை உயர்ந்த காரை ஓட்டி ஆட்டோக்கள் மீது மோதி விக்னேஷ் என்ற கார் பந்தய வீரரால் ஒரு வாலிபர் உயிரிழந்தார். இதே போல் பல விபத்துகள் சென்னையில் வாடிக்கையாகி வருகிறது.
ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாருக்கு அவர்கள் விஐபி வீட்டு பிள்ளைகள் என்பதால் மேலதிகாரிகளாலேயே துன்புறுத்தல் வருவதால் எனக்கென்ன என்று விட்டுவிடுகின்றனர்.
இதன் விளைவு விஐபி வீட்டு பிள்ளைகளுக்கு தலைகால் புரிவதில்லை. இவர்கள் ஒரு குழுவாக பல கோடி மதிப்புள்ள கார்களை விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அதை சாலையில் ரேஸ் விடுகின்றனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்திலிருந்து பாண்டிவரை அடிக்கடி கார் ரேஸ் நடத்துவதாகவும் , இதில் விஐபி வீட்டு பிள்ளைகள் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை பயன்படுத்துவதாகவும் போக்குவரத்து துணை ஆணையர் தெற்கு அரவிந்தனுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அவர்களை மடக்கி பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றபோது ஆய்வாளர் சௌந்தரராஜன் கால் மீது காரை ஏற்றிவிட்டு ராகுல் கிருஷ்ணா என்பவர் தப்பி ஓடினார் . அவரை போலீசார் விரட்டி பிடித்தனர். இதே போல் ரேசில் சென்ற 16 கார்களில் 10 கார்களை மடக்கி பிடித்தனர்.
இதற்கு பின்னர்தான் ஆரம்பித்தது தொல்லை. காரை பிடித்த போலீஸ் அதிகாரிகள் , போலீசாருக்கு ஏகப்பட்ட மிரட்டல் கால்கள் . கார்களை விடுவிக்கும் படி போன் கால்கள் வந்தன. ஆனால் மேலதிகாரி அரவிந்தன் நியாயமானவர் , யாருக்கும் அஞ்சாதவர் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மன தளராதவர்கள் சென்னையின் உச்ச அதிகாரியை பிடிக்க உடனடியாக அவரிடமிருந்து போன் கால்கள் பறந்ததாம். போக்குவரத்து ஐஜி அபய்குமார் சிங் நேரடியாகவே போய் பஞ்சாயத்தில் ஈடுபட்டாராம்.
ஆனாலும் ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியானதால் உயர் அதிகாரிகளின் அழுத்தம் எடுபடவில்லை. போலீசார் அனைத்து கார்களையும் பறிமுதல் செய்தனர். அதிவேகமாக காரை ஓட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கார் உரிமையாளர்கள் பெயரும் வாகனங்கள் விபரமும். 1. விக்னேஷ்வரன் (Porsche car) ,2. சித்தார்த் (Ferrari car) , 3. விஷால் (lamb car), 4.Dr.யஷ்வந்த் (Audi car) , 5. வினாயக் நிலேஷ் ( Benz car), 6.சங்கர் ராமன் (lambagini car) , 7. பிரசன்ன பாபு (Porsche car ), 8.கேரம் சந்த் (Audi car ), 9. கீர்த்தி ராஜகோபால் (BMW car) , 10. ராகவ் கிருஷ்ணா (Lambagini car ) இவர் மீது விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது.
ராகவ் கிருஷ்ணா காரை அதிகாரி மீது மோதிவிட்டு தப்பி சென்றதால் அவர் மீது போடப்பட்ட வழக்குக்குக்கு ஜாமீன் கிடைக்காது. ஆனால் உச்ச அதிகாரி நேரடியாக போக்குவரத்து அதிகாரிகளை அழைத்து விடுவிக்க உத்தரவிட்டதன் பேரில் அனைவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உயிரை பணயம் வைத்து பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக ரேஸ் ஓட்டும் நபர்களை பிடித்தால் உயர் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதரவாக துணைக்கு வந்தால் எங்கள் பணியை செய்ய விரக்திதான் ஏற்படுகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பினார்.
கைப்பற்றப்பட்ட கார்கள் இன்று காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு போக்குவரத்து துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்படும்.