
தமிழகத்தில் விவசாய நிலங்களின் அளவு குறைந்து வருதாகவும், இப்படியே போனல் ஒரு காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகமெங்கும் உள்ள விளைநிலங்கள் மிக அதிக அளவில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டுமனைகளாக பதிவு செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விளைநிலங்களை வீட்டுமனைகளாக பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் பல ஆண்டுகளாக நலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும் எனவே தங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில்,உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தினை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஒருங்கிணைந்த செயல்திட்டம் எதனையும் இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த நிலையில் விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்து விட்டது.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து ஒருங்கிணைந்த செயல்திட்டத்தினை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்து, வழக்கை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.