உயர் அதிகாரி டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற காவலர்!

By manimegalai aFirst Published Dec 29, 2018, 1:39 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோர்ட் வளாகத்தில் கிளைச்சிறையும் உள்ளது. இங்கு ஒரு சூப்பிரண்டு, 2 வார்டன்கள், 3 ஏட்டு, 6 காவலர், ஒரு சமையலர் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோர்ட் வளாகத்தில் கிளைச்சிறையும் உள்ளது. இங்கு ஒரு சூப்பிரண்டு, 2 வார்டன்கள், 3 ஏட்டு, 6 காவலர், ஒரு சமையலர் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த சிறையில் கடம்பூர் மேல தெருவைச் சேர்ந்த கருப்பசாமி(30) என்பவர் 2ம் நிலை காவலராக வேலை பார்க்கிறார். கிளை சிறையில் இன்று சிறை எஸ்பி ஆய்வு செய்ய வருவதாக இருந்தது. இதையொட்டி சிறையில் வைத்திருந்த துப்பாக்கிகளில் சில பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்தது.

அதை பெறுவதற்காக நேற்று காலை காவலர் கருப்பசாமியும் மற்றொரு காவலரும் பாளை மத்திய சிறைக்கு சென்றனர். அங்கு இவர்களை பார்த்த மேல் அதிகாரி ஒருவர், கருப்பசாமியியை மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது.

பின்னர் அவர்கள் மத்திய சிறையில் இருந்து 6 துப்பாக்கிகளை வாங்கி கொண்டு மாலையில் கோவில்பட்டி சிறைக்கு வந்தனர். அங்கு அவற்றை ஒப்படைத்து விட்டு, வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதாக கருப்பசாமி அங்குள்ளவர்களிடம் கூறிச்சென்றார்.

இதற்கிடையில் கோர்ட் வளாகத்தில் இரவு 8 மணியளவில் கருப்பசாமி மயங்கி கிடந்தார். அவரை சிறை காவலர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. கருப்பசாமி எதற்காக தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கருப்பசாமி தினமும் பைக்கில் வேலைக்கு வந்துவிட்டு இரவு வீடு திரும்பி விடுவாராம். இந்த சிறையில் காவலர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வந்தார்களாம். இது பாளை மத்திய சிறை அதிகாரிக்கு தெரியவந்ததால் அவர், காவலர் கருப்பசாமியை திட்டி உள்ளார்.

இதுகுறித்து கருப்பசாமி தனது தரப்பு நியாயத்தை இங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லையாம்.

இந்நிலையில்தான் கருப்பசாமி ஒரு மாதத்திற்கு முன் சென்னை புழல் சிறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் கருப்பசாமி அங்கு செல்லாமல் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு போட்டு ஸ்டே வாங்கினார். இதனால் அவர் தொடர்ந்து கோவில்பட்டி சிறையில் பணியாற்றி வந்தார்.

இதனால் நேற்று பாளை மத்திய சிறைக்கு துப்பாக்கி வாங்கச் சென்ற இடத்தில் மேல் அதிகாரி அவரை மட்டுமின்றி குடும்பத்தினரையும் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

அந்த அவமானம் தாங்காமல், மன உளைச்சலுடன் கோவில்பட்டி திரும்பிய அவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் விஷமருந்தி இருக்கிறார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

click me!