கல்லூரி, பல்கலை.,களில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள்… உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Nov 22, 2021, 6:19 PM IST
Highlights

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது கல்லூரிகள் மூடப்பட்டு முழுமையாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டதால் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்வுகளானது எழுத்துத்தேர்வாகவே நடத்த உத்தரவிடப்பட்டது. அதேவேளையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்தது. ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்படுவதால், கல்லூரிகளில் நடப்புத் தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை என மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆன்லைனில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. ஆன்லைன் வகுப்புகளை எங்களால் சரிவர கவனிக்க முடியவில்லை என மாணவர்களே தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை முழுமையாக உள்வாங்க முடியாத நிலையில், நேரடித் தேர்வுகள் நடத்தப்பட்டால், தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இனிவரும் நாட்களில் அனைத்து வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் எந்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!