கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு… இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

By Narendran SFirst Published Aug 29, 2022, 6:06 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் மாணவியின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இது பெரும் போராட்டமாக மாறியதை அடுத்து பள்ளி வாகனம் எரிக்கப்பட்டதுடன் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இதனிடையே மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, மூன்று அறிக்கைகளை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலிபணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி? ஊதியம் எவ்வளவு?

பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையில், மாணவி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 53 யூடியூப் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 7 ட்விட்டர் பக்கங்களும், 21 ஃபேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. வதந்தி பரப்பியதாக 3 வாட்ஸப் குழுக்களின் அட்மின்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 63 போலீசார் உள்பட 202 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர சுப்பு, ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரித்துள்ள ரவுடிகள் தொல்லை...! தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் மறுப்பு

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மாணவியின் தாய் முதல்வரை சந்தித்து முறையீடு செய்தார். அதனைக் கேட்ட முதல்வர், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் மனுதாரர் தெரிவிக்கும் அச்சம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜிப்மர் ஆய்வறிக்கை மற்றும் விசாரணை நிலை குறித்த அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க மறுத்த நீதிபதி, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் நியமித்த அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், வழக்கின் புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

click me!