சுரங்கங்களை கண்காணிக்க ட்ரோன்..சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

By Thanalakshmi VFirst Published Jan 21, 2022, 9:51 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் சுரங்க நடவடிக்கைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஏசிசி சிமெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடந்த 2002-ம் ஆண்டு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'எங்கள் நிறுவனம் வாளையார் வனப் பகுதியில் உள்ள பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் கனிம வளங்கள் உரிய அனுமதியுடன் எடுத்து வந்ததோம். சிமென்ட் தயாரிப்பதற்கான லேட்டரைட், இரும்புத் தாது, பாக்சைட், ஜிப்சம் போன்ற சுண்ணாம்புக் கல்லைத் தவிர, பல தாதுப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும். பல்வேறு வகையான சிமென்ட் தயாரிப்பில் முதல் கட்டம் 'கிளிங்கர்' எனப்படும் கலவையாகும். சுரங்க குத்தகை ஒப்பந்தத்தின் பிரிவு 13-இன்படி, எடைப் பாலங்கள் மற்றும் சுரங்க குத்தகைகளின் இருப்பிடத்தைக் காட்டும் திட்டத்தைச் சமர்ப்பித்து அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும், சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்களுக்கான ராயல்டி உரிமையை முறையாக அரசுக்கு செலுத்தி வருகிறோம். இந்த சுரங்க குத்தகைப் பகுதிகளில் இருந்து உயர்த்தப்பட்ட மற்றும் அகற்றப்பட்ட சுண்ணாம்புக் கற்களுக்கான எடைப் பாலத்தில் கனிமவளத்துறை எடையின் அடிப்படையில் உரிமத்தொகை செலுத்துகிறோம். இந்த நிலையில் கனிமவளத்துறை உரிமத்தொகை அதிகமாக செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மற்றும் பூமியின் கீழ் உள்ள அனைத்தும் தேசத்தின் செல்வங்கள். அவை "இந்திய மக்களுக்கு சொந்தமானது. சில பேராசை கொண்டவர்களால் அநியாய லாபம் ஈட்டுவதற்காக அவை சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. இவை தொழில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் அதேவேளையில், தேசத்தின் செல்வத்தையும் பொது நலனையும் பாதுகாக்க வேண்டும். எனவே, எந்த வகையிலும் சுரண்டல்களை அனுமதிக்க முடியாது. தேசத்தின் நலன் மற்றும் அதன் சொத்துக்கள் சுரண்டப்படுவதை எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்ய முடியாது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணைகளை அடைய அனைத்து வகையிலும் பொது நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

மேலும் அரசு பிறப்பித்துள்ள நோட்டீஸ்களில் கேட்கப்பட்டுள்ள ராயல்டி உரிமையை மனுதாரர் செலுத்தவேண்டும். சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் 'ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் சுரங்கங்களை கையாள்பவர்கள், வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்களை மதிப்பிடுவதற்கும், வசூலிக்கப்பட வேண்டிய ராயல்டியை நிர்ணயம் செய்வதற்கும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுரங்க நடவடிக்கைகளிலும் இனி ட்ரோன் மூலம் அளவீடுகளை செய்ய வேண்டும்" என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதம் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.

click me!