இனி உங்களுக்கு கருணை கிடையாது - தமிழக அரசை நோக்கி பாய்ந்த ஐகோர்ட்

Published : Dec 01, 2021, 06:15 PM IST
இனி உங்களுக்கு கருணை கிடையாது - தமிழக அரசை நோக்கி பாய்ந்த ஐகோர்ட்

சுருக்கம்

தமிழகம் முழுதுவதும் நீர்நிலைகளில் உள்ள தனியார் மற்றும் அரசுஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என்றும் இனியும் கருணை காட்ட முடியாது என்றும் தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  

சென்னை அருகே சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள்,  திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர் நிலை, பண்ருட்டியில் உள்ள செட்டிப் பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் வடவம்பாலம் பாசன கால்வாய், மேல்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஏரி, கீழ்மருவத்தூர் ஏரி, கடலூரில் வி. மாத்தூர் ஏரி உள்ளிட்ட உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கக் கோரிய பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில் ஏரி , குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்லூரிகள் , தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன. 

இதனை விசாரித்த நீதிபதிகள் , தண்ணீர் மிகவும் அவசியமானது, தற்போது மழையால்  நீர் கிடைத்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என குறிப்பிட்டனர். இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அரசின் நிலைபாடு என்ன என்று கேள்வியெழுப்பினர். இதற்கு அரசு தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சில மனுதாரர்கள் தரப்பில், தனியார் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாமல், நீர்நிலைகளிலேயே குப்பை கொட்டும் மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் ஆகியவை அமைத்து அரசும் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்ற உத்தரவை  நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டது. தவறும்பட்சத்தில் தலைமை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும் என எச்சரித்துள்ளது. அதேசமயம், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த  2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இனி மேற்கொண்டு எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்