12 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலெர்ட்.... தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை... - மக்களே உஷார்.....!

By Raghupati RFirst Published Nov 27, 2021, 8:17 AM IST
Highlights

தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது.இதன் மூலமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதி கனமழை 3 இடங்களிலும், கன முதல் மிக கனமழை 4 இடங்களிலும், 70 இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

ஏற்கனவே பெய்த மழை, வரும் நாட்களில் பதிவாக உள்ள மழை மற்றும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு, கடலோர மாவட்டங்களுக்கு அடுத்து வர உள்ள 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்), அதை ஒட்டி யுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்படுகிறது. இதன்படி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை ( ரெட் அலர்ட்) அதாவது 20 செ.மீ வரை அல்லது அதற்கு மேல் மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

29-ந் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 30-ந் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம் ஆகிய  மாவட்டங்களில் நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்று காலை வரை விட்டு விட்டு கன மழையாக பெய்து வெளுத்து வாங்குகிறது. ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட மாவட்டங்களில் 20 செ.மீ அல்லது அதற்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

click me!