Tamilnadu Rain Update: தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 4ம் தேதி வரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் மற்றும் எத்தனை நாட்கள் வரை மழை இருக்கும் என்ற தகவலை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறையா? முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்!
அதேபோல் நாளை முதல் ஜனவரி 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டில் எத்தனை பொது விடுமுறை? பள்ளி மாணவர்களுக்கு எந்த மாதத்தில் லீவு அதிகம் தெரியுமா?
மீனவர்களுக்கான எச்சரிக்கை
31 முதல் 02ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
30 முதல் 31ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
ஜனவரி 02ம் குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.