அடிச்சு ஊத்தும் கனமழை… இன்றும் பள்ளிகளுக்கு லீவு.. எத்தனை மாவட்டங்களுக்கு தெரியுமா..?

By manimegalai aFirst Published Oct 30, 2021, 7:07 AM IST
Highlights

தமிழகத்தில் பருவமழை தொடர்வதால் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழகத்தில் பருவமழை தொடர்வதால் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கி இருக்கிறது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவை, சேலம், திருச்சி, தென்காசி, கடலூர், விழுப்புரம் என பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது.

இடைவிடாது பெய்து தீர்க்கும் கனமழையால் தமிழகத்தில் அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பின. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின.

நெல்வயல்கள் நீரில் மூழ்கியதால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந் நிலையில் தமிழகத்தில் நேற்றிரவு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை ஓயவில்லை. விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நெல்லை மாவட்டத்தில் இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தொடர் மழை எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டு உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை விட்டபாடில்லை. இடி, மின்னலுடன் கொட்டிய மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆகையால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டமும் மழைக்கு தப்பவில்லை. தொடரும் கனமழையால் அம்மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மழை மேலும் வலுத்துள்ளதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடரும் மழையால் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழையின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதால் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் அடிச்சு தூக்கும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இரவு முழுவதும் தொடர்ந்து மழை தட்டி தூக்கியது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் தூத்துக்குடியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியிலும் மழையின் தாக்கம் குறையவில்லை. மழை விடாது கொட்டி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் இன்று தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலு இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மற்ற மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

click me!