ஈரோட்டின் பல பகுதிகளில் விடாமல் பெய்யும் பலத்த மழை; சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பு...

First Published May 22, 2018, 9:46 AM IST
Highlights
heavy rain in many places in erode flooding on roads ...


ஈரோடு 

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

ஈரோட்டில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பகலில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்து வெளுக்கிறது. நேற்றும் 102 டிகிரி வெயில் அடித்ததால் பகலில் அனல் காற்று வீசியது. இதனால், மக்கள் வெளியில் செல்வதற்காக மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியதுடன் மழையும் பெய்ய தொடங்கியது. திடீரென சூறாவளி காற்று வீசியதால் சாலையில் நடந்து சென்ற மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். 

இதேபோல இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முடியாமல் திணறினர். இதனால், ஆங்காங்கே, சாலையோரமாக அவர்கள் வாகனங்களை நிறுத்தி மழைக்கு ஒதுங்கினார்கள்.

தொடர்ந்து இடி - மின்னலுடன் சுமார் ஒன்றரை மணிநேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கி நின்றது. 

ஈரோடு தில்லை நகர், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, நேதாஜிரோடு, சத்திரோடு, சென்னிமலைரோடு, குமலன்குட்டை, தெப்பக்குளம் வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி, அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

பலத்த மழையுடன் சேர்ந்து சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பெருந்துறைரோடு குமலன்குட்டை பகுதியில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. அதன்பின்னர் காரின் உரிமையாளர் கிரேனை வரவழைத்து மரக்கிளையை அகற்றி காரை மீட்டார். 

இதேபோல அந்தியூரில் நேற்று இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை பலத்த மழை பெய்தது. மேலும் கொடுமுடி, ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், தாமரைப்பாளையம், ஒத்தக்கடை, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் 8.20 மணி முதல் 8.55 மணி வரை பலத்த மழை கொட்டியது.

கோபி, மொடச்சூர், கரட்டுப்பாளையம், நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம், பாரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 8.15 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை கொட்டியது. சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மணி முதல் 9.45 மணி வரையும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. 

click me!