
கன்னியாக்குமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடும் வறட்சி நிலவி வந்த கன்னியாக்குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி சாலையெங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மூன்றாவது நாளாக இன்றும் கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
மழை காரணமாக பெருஞ்சாணி அணையில் ஒரே நாளில் இரண்டரை அடி தண்ணீர் உயர்ந்து வினாடிக்கு 359 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கன்னியாக்குமரி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்சியில் திளைத்து வருகின்றனர்.
மேலும் நாகர்கோவில், கன்னிமார், மயிலாடி, பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் வருகிறது.
இதே போல் கோவை மாவட்டம் வால்பாறையிலும் தொடர் மழை பெய்ததால், அங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.