
தமிழர் பாரம்பரிய வரவேற்புகள், மாவிலை தோரணங்கள், வண்ண வண்ண ரங்கோலி கோலங்களுடன் சென்னை மெட்ரோ ரெயில் புதுப்பொலிவு பெற்று ஜொலிக்கிறது.
சென்னை மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2007–ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
2009–ம் ஆண்டு ரூ.14 ஆயிரத்து 600 கோடியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயையும், சின்னமலை – விமான நிலையம் (9 கி.மீ. நீளம்) இடையேயும், ஆலந்தூர் -– பரங்கிமலை (1.2 கி.மீ. நீளம்) இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கியது. திருமங்கலம் – நேரு பூங்கா (7.40 கி.மீ. நீளம்) இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கியது.
ஆனால், சென்னை மெட்ரோ ரெயிலைக் காட்டிலும் கொச்சி மெட்ரோ ரெயிலில் பயணிகளைக் கவரும் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. ரெயில்பாலத்தின் ஒவ்வொரு 6-வது தூணிலும் செடிகள் வளர்க்கப்பட்டு பசுமையாக்கப்பட்டு உள்ளன.
எந்த ரெயில் நிலையத்திலும் பயணிகள் இறங்கி இலவச சைக்கிள் பயணம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்புகளும், 60-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு பணியும் வழங்கப்பட்டது.
ெமட்ரோ ரெயில் பயணிகளுக்கு பிடித்தவாறு இருக்கும் வகையில், கதவு திறந்தவுடன் சென்டை மேளம் இசைத்தல், வண்ண இருக்கைகள், மெல்லிசை என பயணிகளை குஷிப்படுத்தி உள்ளன. இதனால் நாளுக்குநாள் மெட்ரோவில் பயணிகள் கூட்டம் குவிகிறது.
ஆனால், சென்னை மெட்ரோ ெரயிலிலும் இதுபோல் வசதிகள் இல்லையே என மக்கள் ஏக்கம் அடைந்தனர்.
குளிர்வசதியைத் தவிர்த்து, சாதாரண ரெயிலைப் போன்று மெட்ரோரெயில் இருப்பது பயணிகளுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது.
சென்னை மெட்ரோ கதவுகளின் இரு புறமும் தமிழரின் பாரம்பரிய விழாக்களில் கட்டப்படும் வாழைமரங்களுடன் கூடிய மாவிலை தோரணம் ஸ்டிக்கர்கள் பிரமாண்டமாக ஒட்டப்பட்டுள்ளன.
அவை பார்ப்பதற்கு பயணிளை இன்முகத்துடன் வரவேற்பது போன்று, ஒரு விசேஷ வீட்டுக்குள் நுழைவது போன்ற பரவசத்தை பயணிகளுக்குஅளக்கிறது.
அதன்பின் ரெயிலுக்குள் உள்ளே நுழைந்தால், பார்ப்பவர்கள் பிரமிக்கும் வகையில் ரங்கோலி கோல ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தரையில் அழகான தமிழர் பாரம்பரி வண்ணக் கோலங்கள், ரங்கோலி கோலங்கள் என சிறியது முதல் பெரியது வரை வரையப்பட்ட கோல ஸ்டிக்கர்கள் ரெயில் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், இருக்கையின் இருபுறமும் குத்துவிளக்குகள் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, பயணிகளை வரவேற்கிறது. மேலும், ரெயிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குள் அருகேயும் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் கோல ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டு விளக்கு ஒளியில் ஜொலிக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் சென்னை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஜொலிக்கத் தொடங்கியுள்ளது.