Tamilnadu Rain : தமிழகத்தில் டிச.4 முதல் மீண்டும் கொட்டப்போகிறது கனமழை… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

By Narendran SFirst Published Dec 2, 2021, 3:03 PM IST
Highlights

தமிழகத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தில் கனமழை பெய்தது. மேலும் அடுத்து நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுநிலைகள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்த காரணத்தால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும் மக்கள் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். இந்த நிலையில் அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 4 ஆம் தேதி மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், டிசம்பர் 5 ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகே, இதன் பாதையை துல்லியமாகக் கணிக்க முடியும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடலோர ஆந்திர மாவட்டங்கள் மற்றும் கடலோர தெற்கு ஒடிசா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இது புயலாக உருவானதும் இதற்கு ஜாவத் என்று பெயரிடப்படும். இது டிசம்பர் 4 ஆம் தேதி காலை வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடற்கரையை நோக்கி டிசம்பா் 4 ஆம்தேதி காலை நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

click me!