
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் பெரிய அளவு மழை பெய்யாது. ஆனால் கேரளா, மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழையால் நல்ல மழை கிடைக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. பூமி வறண்டு போகாத நிலையில், அனைத்து இடங்களில் ஈரம் பார்த்துவிட்டு வானம் மூடிக் கொள்கிறது.
தேனி, கோவை, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த வரம் பலத்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கிட்டத்திட்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர், பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மத்திய, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு, கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் வரும் 15 ஆம் தேதி ஒரு வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீபாவளி அன்று புயலாகவும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புயலால் ஒடிசா மற்றும் ஆந்திராவில் பாதிப்பு ஏற்படும் என்றும், அப்படி புயலாக மாறிவில்லை என்றால் தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.