
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துவரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்குவைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளோடு சேர்த்து டெங்குவால் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகளை மறைக்கும் நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது.
டெங்கு தீவிரமடைந்துள்ளதால் சுகாதார மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளும் அலுவலர்களும் நேரம் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு அரசும் உயரதிகாரிகளும் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.
டெங்கு உயிரிழப்புகளை குறைத்து காட்ட சொல்லி நெருக்கடி கொடுத்ததால் பாலமுருகன் என்ற சுகாதார ஆய்வாளர், தற்கொலை முயற்சி செய்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி அலுவலர் ஒருவர் தொல்லை தாங்காமல் வேலையை ராஜினாமா செய்துள்ளார். முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில்தான் டெங்குவால் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் சேலம் மாநகராட்சி மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர்நல அலுவலராக இருந்த பிரபாகர் என்பவர், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை பணிகளை தனது சொந்த பணத்தை செலவு செய்து மேற்கொண்டு வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாகவே தனது சொந்த பணத்தை செலவு செய்துள்ளார். டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகமோ மாநகராட்சி நிர்வாகமோ அதற்கான போதுமான நிதியை ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆனாலும் பணிகள் முடங்கிவிடக்கூடாது என்பதற்காக தனது சொந்த பணத்தில், கொசு மருந்து அடித்தல், குப்பைகள் அகற்றம் உள்ள பணிகளை பிரபாகர் மேற்கொண்டுள்ளார். சுகாதாரப் பணியாளர்கள், டீ குடிக்கும் செலவு வரை தனது சொந்த பணத்தை செலவு செய்துள்ளார்.
ஆனால் அதற்கான எந்த பணத்தையும் கொடுக்காமல் நெருக்கடியை மட்டுமே மாநகராட்சி ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நெருக்கடியை தாங்க முடியாமல் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார் நகர்நல அலுவலர் பிரபாகர்.