
விருதுநகர்
சிவகாசியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் வந்த 500 ரூபாய் நோட்டில் செங்கோட்டையின் பாதிப் பகுதி அச்சிடாமல் இருந்ததைக் கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி புதுச்சாலைத் தெருவில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இங்கு, பட்டாசு மூலப்பொருள்கள் விற்பனை செய்யும் கணேஷ் என்பவர் கணக்கு வைத்துள்ளார்.
இந்த நிலையில் கணேஷ் நேற்று அந்த வங்கியின் அருகில் இருக்கும் ஏடிஎம்மில் ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். பணத்தை கையில் எடுத்தப் பார்த்த கணேஷ் அதிர்ச்சி அடைந்தார். அதில், ஒரு 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டைப் படம் இருக்கும் பகுதியில் படம் எதுவும் அச்சிடாமல் வெறுமையாக இருந்தது.
பாதி டெல்லி செங்கோட்டையைக் காணவில்லை என்று உடனடியாக வங்கி மேலாளரை அணுகி விவரித்துள்ளார்.
வங்கி மேலாளர் ஏடிஎம்மில் வைத்த ரூபாய் நோட்டுகளின் எண்களை சரிபார்த்தார். அப்போது பிழையாக அச்சிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டின் எண்ணும் இருந்தது. உடனே கணேஷூக்கு வேறு ரூபாய் நோட்டை வழங்கி வங்கி மேலாளர் அவரை அனுப்பி வைத்தார்.