திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சை, பழநி கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு எச்.ராஜா, அமைச்சர் சேகர் பாபுவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சை, பழநி ஆகிய கோவில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்: மார்ச் 16ம் தேதியன்று திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம் குமார் என்கிற பக்தர் நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் மரணம்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளுக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்! அப்படி இல்லனா அவரது ஆன்மாவிற்கு இழைக்கும் துரோகம்! எச்.ராஜா
மார்ச் 17ம் தேதியன்று இராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசாமி கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் மரணம்.
மார்ச் 18ம் தேதியன்று தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற பக்தர் நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.
மார்ச் 19ம் தேதியன்று பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்ற நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த செல்வமணி என்கிற பக்தர் நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் மரணம்.
ஆலயங்களில் தரிசன கட்டணம், அபிஷேக கட்டணம், அர்ச்சனை கட்டணம், அன்னதான நன்கொடை, ஆலய திருப்பணி நன்கொடை, ஆலயத்திற்கு வெளியே வாகனம் நிறுத்த கட்டணம் என பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும், பக்தர்களின் உண்டியல் காணிக்கை பணத்தைக் கூட விட்டுவைக்காமல் அதையும் எடுத்து இந்து விரோத திராவிட மாடல் அரசின் ஆடம்பர தேவைகளுக்கு செலவழிக்க அனுமதிக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.
இதையும் படிங்க: திருச்செந்தூர், ராமேசுவரத்தை அடுத்து பழநி முருகன் கோவிலில் பக்தர் உயிரிழப்பு! கலங்கிய அண்ணாமலை!
ஆலயங்களுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதரும் ஆலயங்களில் காற்றோட்ட வசதி, மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு இருக்கைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட தேவையான எந்த விதமான முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்காத காரணத்தால் தற்போது தமிழகத்திலுள்ள ஆலயங்களில் அனுதினமும் ஒரு பக்தரின் உயிர் பலியாகும் துயர சம்பவம் அரங்கேறி அனைவரையும் வேதனையில் ஆழ்த்தி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலயங்களை நல்ல முறையில் நிர்வகிக்க தகுதியில்லாத அமைச்சர் சேகர்பாபு அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.