Chennai Rowdy Murder Case: பல்லாவரத்தில் ஏரியா கெத்து தகராறில் நண்பர்கள் குழு மோதிக்கொண்டதில் அருண்குமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலை அருகே உள்ள கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்தவன் அருண்குமார் (24). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்க அருண்குமார் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த சிமியோன் (23), ஜோஸ்வா (20), சிக்கந்தர் (20), ராஜேஷ் (20) மற்றும் 2 சிறுவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்த போது ரயில் மூலம் ராமநாதபுரம் தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்து மூலம் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தனர். அப்போது 5 பேரையும் பிடிக்க முயன்ற போது தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, தடுமாறி கீழே விழுந்ததில் கொலையாளிகள் சிமியோனுக்கு ஒரு கையிலும், ஒரு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேபோன்று ஜோஸ்வா மற்றும் சிக்கந்தருக்கும் தலா ஒரு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அருண்குமாரும், சிமியோனும் ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து வந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக தனித்தனி குழுவாக செயல்பட்டு வந்தனர். அருண்குமார், தான்தான் இனி ஏரியாவில் கெத்து என்று கூறிக்கொண்டு தனது நண்பர்களுடன் சுற்றித்திரிந்துள்ளார்.
இது சிமியோன் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் சிமியோனின் தரப்பைச் சேர்ந்த 2 சிறுவர்களை, அருண்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்த சிமியோன் தரப்பினர், அருண்குமாரை கொடூரமாக வெட்டிக்கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில், 2 பேர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், 4 பேர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.