
பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழக பாஜக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோடியின் பிறந்ததினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. அந்தவகையில், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் இனிப்பு வழங்கினார். மேலும் ஒய்.எம்.ஆர்.பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினார். மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு சிறுபான்மை அணி நகர தலைவர் ரூபன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
கபடி போட்டியில் எச்,ராஜா
இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் மோடி கபடி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தொடங்கிவைத்தார். அப்போது பேசிய எச்.ராஜா ஆர் எஸ் எஸ் பயிற்சி பாசறையில் கபடி விளையாடியதை நினைவுகூர்ந்தார். இதனையடுத்து கபடி போட்டியை தொடங்கி வைத்த எச். ராஜா கபடி களத்தில் இறங்கி விளையாடவும் செய்தார். அப்போது ரைடராக சென்ற அவர் எதிரணியில் இருந்த புதுக்கோட்ட மாவட்ட தலைவர் செல்வ அழகப்பனை அவுட் செய்தார். இதனையடுத்து உற்சாகமடைந்த பாஜகவினர் எச்.ராஜாவை தோளில் தூக்கி உற்சாகமாக கொண்டாடினர்.
கோட்டை தாண்டி அடிக்க பிடிக்கும்
இந்த கபடி போட்டியில் பங்கேற்றது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த எச்.ராஜா, எனக்கு மிகவும் பிடித்தது கோட்டை தாண்டி தொட்டு பி(அ)டிப்பதே! புதுக்கோட்டையில் பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டதிலும் விளையாண்டதிலும் மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்