குட்கா முறைகேடு வழக்கு: 11ஆவது முறையாக வாய்தா கேட்ட சிபிஐ!

Published : Jul 17, 2023, 02:38 PM IST
குட்கா முறைகேடு வழக்கு: 11ஆவது முறையாக வாய்தா கேட்ட சிபிஐ!

சுருக்கம்

குட்கா முறைகேடு வழக்கில் 11ஆவது முறையாக நீதிமன்றத்தில் சிபிஐ வாய்தா கேட்டுள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள குடோனில் 2016ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோத குட்கா விற்பனைக்காக யார், யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற குறிப்புகள் அடங்கிய டைரி கிடைத்ததாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் கடந்த 2017ஆம் ஆண்டில் செய்தி வெளியானது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனை நடைபெற, காவல்துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர், உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவிடம் போலீசார் நடத்திய விசாரனையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் காவல்துறை இயக்குனர் டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கார்கில் நினைவு தினம்: புல்லட்டில் புறப்படும் வீராங்கனைகள்!

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்,  அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிலருக்கு எதிராக விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை அளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்ற நிதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த வழக்கில் 11ஆவது முறையாக நீதிமன்றத்தில் சிபிஐ வாய்தா வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடந்தாண்டு முதல் சிபிஐ அனுமதி கோரி வரும் நிலையில், அதற்கான அனுமதி மத்திய அரசால் இன்னும் வழங்கப்படவில்லை.

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு மாநில அரசிடம் சிபிஐ இசைவு ஆணையை கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால், ஆளுநர் மாளிகையில்  இருந்து இதுவரையில் அந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்மையில் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும், அந்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்